
ஏதோவொரு சஞ்சலம் எட்டிபிடிக்கிறது
இந்நொடி..
எல்லாமே ஒரு வினாடிக்குள் எட்டாக்
கனியென கசந்து விடுமோ என்ற
வார்த்தை தவிர்ந்த மொழி எனக்குள்
மெல்லவே கசிகின்றது..
ஏனென்று என்னை கேட்க எச்சரிக்கை
ஒன்றை விட்டு செல்கிறது எண்ணற்ற
வடிவங்களில் தன் மொழிவளந்தனில்..
இருள்மட்டுமே சூழ்ந்த இதயப்பரப்பில்
இயல்பாக இயங்குகின்றது
விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட
இருதய அரங்கம்..
அன்னையின் தாலாட்டு அதோ என்
செவிகளில் மட்டும் தெளிவாக
கேட்கிறது..
அப்பாவிடம் தவழ்ந்த நாட்கள் விழி
சேமிப்பு அறையில் எனக்கு மட்டும்
தெளிவாகத் தெரிகிறது..
அன்றுமுதல் இன்றுவரை ஆதிக்கம்
முழுதும் தந்தையின் தோளேயன்றி
வேறொன்றாக நானறியேன்.
என்தேவை அறியும் அவர் மொழி
என்விழி ஒன்றுதான்..
அம்மா என்றழைக்கும் தொனியில்
என்னை உணரும் தாயின்
தலையணைப்பு முத்தம்..
கைகட்டி தூண் சாயும் பெரியண்ணாவின்
பார்வையில் நான் அமைதியான நாற்கள்
எண்ணிலடங்காதது..
கண்ணியம் ஒன்றே கனிவெனும் வார்தை
மொழிதலிலும் சிறுகுட்டோடு ஒற்றை
கண் அசைவில் நகர்தலில் உண்டாகும்
உட்சாகம் அப்பப்பா..
பல சந்தர்பங்களில் பலவகைகளில்
வரையறையின்றி என்னிடம் பணம்
இழந்த அண்ணன்களின் பெயர்களை
நான் பொதித்த அவரவர் பாணத்தாள்ச்
சுவர்களை எடுத்துப் பார்கிறேன்..
நினைவறிந்த நாள்முதல் இன்று
வரையில் என்னோடு இருக்கும்
உண்மையான அன்பானவர்களின்
முகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக
என்மனக்கண்முன் நிழலாடுகிறது
ஏன் காரணமேதுமின்றி பிரிவெனும்
சொல்லோடு கைகுழுக்கியவர்களின்
முகங்களும் கூடவே என்னை
நிர்பந்திக்கிறது..
நினைவுகள் நினைவுகளாகவே நடமாட
கற்பித்த அனைத்து ஆசிரியர்களின்
தொடர்புகளை எங்கெங்கோ தேடி
அழைக்கிறேன்..
தலை நிமிர்த்தியவர்களை தலை
வணங்குவதில் தயக்கம் இல்லை
என்றாலும் ஏனிந்த தாமத
அலவலாவல்!
மனதலவில் உடைந்தே உணர்ந்தும்
உறைக்க இயலவில்லை..
ஏதோ பயமொன்று பயணிக்க
ஆரம்பித்து இருக்கிறது இன்று..
தடையமோ தயக்கமோ இன்றி.
நால்வரின் நான்கு கைகள் சுமந்த
அந்த நீள்சதுர பெட்டியுள்ளிருந்து
எனக்குள் நானே பேசுவதாக ஓர்
பிரம்மை..
தனிப்பயணம் அதுவும் இயங்க
மறுக்கும் உறுப்புகளோடு.
சுற்றத்தாரின் கண்ணீர் ஒன்றேதான்
பிறப்பின் வெகுமதியா..
இமையாமல் விழிகளினூடே வழியும்
கண்ணீரின் சுமை ஏதோ கனக்கிறது.
எதற்கிந்த பிறப்பு எதற்கிந்த இறப்பு
ஆராய்ந்து பார்க்கையில் அனைத்தும்
பூஜியம் தான்..
பிறக்கும் போது அவனே அழுகிறான்.
இறக்கும்போது உற்றாரை
அழுவிக்கின்றான்.
மரணிக்கும் வரையில் அவன் மனிதன்
மரணித்தபின் நான் யார்!
சில கேள்விகளுக்கு விடையும் என்றும்
கேள்வியாகவே தொடர்கின்றது..
.